வெ.குட்டப்பாளையம், பொன்முடி ஊராட்சிகளில்வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
வெ.குட்டப்பாளையம், பொன்முடி ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தாா்
வெ.குட்டப்பாளையம், பொன்முடி ஊராட்சிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் சோதனை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு அதிகாரி
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையாளருமான ஜி.பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்காக ஈரோடு வந்த அவர் சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட வெ.குட்டப்பாளையம் மற்றும் பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பொன்முடி ஊராட்சி பகுதிகளுக்கு சென்றார். அவருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
கட்டுப்பாட்டு கருவி
மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள உயர்நிலை குடிநீர் தொட்டிகளில் பொருத்தப்பட்டு உள்ள தானியங்கி கட்டுப்பாட்டு கருவியை மாவட்ட கண்காணிப்பாளர் ஜி.பிரகாஷ், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்தனர். வெ.குட்டப்பாளையம் ஊராட்சியில் 9 கிராமங்களில் 9 மேல்நிலை தொட்டிகளுக்கு தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தில் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பொன்முடி ஊராட்சியில் 10 மேல்நிலை தொட்டிகளில் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
சோதனையின் போது அங்கு இருந்த பொதுமக்களிடம் பேசிய உயர் அதிகாரிகள், குடிதண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
மின்சார கட்டணம்
தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அமைக்கப்பட்டதன் காரணமாக ஊராட்சிகளுக்கு சுமார் 40 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணம் குறைந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சோதனையின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் சூர்யா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர்கள் அக்ஷய்குமார், பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ரேவதி, ஊராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி (வெ.குட்டப்பாளையம்), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), இளங்கோ (குமாரவலசு), தங்கவேல் (பொன்முடி), வட்டார வளர்ச்சி அதிகாரி குணசேகரன், பாஸ்கர்பாபு, ரமேஷ், ஜோதிபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.