வருசநாடு பகுதியில்மரங்களிலேயே வெடித்து வீணாகும் இலவம் பஞ்சு
வருசநாடு பகுதியில் மரங்களிலேயே இலவம் பஞ்சுகள் வெடித்து வீணாகின்றன.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, காமராஜபுரம், முருக்கோடை, தங்கம்மாள்புரம், கோரையூத்து, அரசரடி, வாலிப்பாறை, காந்திபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கும் நேரத்தில் இலவம் பஞ்சு சாகுபடியும் தொடங்கும். சுமார் 3 மாதங்கள் இலவம் பஞ்சு சாகுபடி இருக்கும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான இலவம் பஞ்சு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான இலவம் காய்கள் காய்த்துள்ளது. பெரும்பாலான காய்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அதேநேரத்தில் இலவம் பஞ்சுக்கு சந்தையில் போதுமான விலை இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ இலவம் பஞ்சு ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.50-க்கு கூட வாங்க யாரும் முன்வரவில்லை. இந்த விலை காய்களை மரத்தில் இருந்து பறிப்பதற்கு ஆகும் செலவுக்கு கூட போதுமானதாக இல்லை.
இதனால் வருசநாடு பகுதிகளில் மரங்களில் விளைந்த இலவம் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வருகிறது. எனவே இலவம் பஞ்சுக்கு உரிய விலையை அரசு நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.