வைகை, மஞ்சளாறு அணை பகுதிகளில் மீன்வளப் பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
வைகை, மஞ்சளாறு அணை பகுதிகளில் மீன்வளப் பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்
அமைச்சர் ஆய்வு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் மீன்குஞ்சுகள் உற்பத்தி பண்ணையில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு மீன்குஞ்சுகள் வளர்ப்பு பணிகளை பார்வையிட்டு, தேனி மாவட்டத்தில் குளங்கள், விவசாய நிலங்களில் குட்டைகள் அமைத்து மீன்வளர்ப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மீன்வளர்ப்பு பணிக்காக மீன் குஞ்சுகளை வைகை அணையில் விடும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மஞ்சளாறு அணையில் மீன்வளப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன் குஞ்சுகள் பொரிப்பக பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அந்த மீன்குஞ்சுகள் வளர்ப்பு பண்ணை வளாகத்தில் அவர் மரக்கன்று நடவு செய்தார்.
கால்நடை கல்லூரி
அதன்பிறகு தேவதானப்பட்டியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அங்குள்ள ஆய்வுக்கூடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டார். பின்னர் தேனி அருகே தப்புக்குண்டுவில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து, விரைவில் திறப்பு விழாவுக்கு தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.