வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2022-08-12 03:35 GMT

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 28). இவர், கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்த அவர், தனது கையில் பச்சை (டாட்டூ) குத்திக்கொள்ள விரும்பினார்.

இதற்காக நேற்று முன்தினம் அவர், வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கிருந்த 2 பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் உள்ளது என்று கூறி விக்னேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். செல்லும் வழியில் கோயம்பேடு பகுதியில் மேலும் 2 பேர் அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டனர்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார் சென்றபோது திடீரென காரில் இருந்த 4 பேரும் சேர்ந்து விக்கியை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த ரூ.60 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் போரூர் சுங்கச்சாவடி அருகே ஓடும் காரில் இருந்து விக்கியை கீழே தள்ளிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், காயம் அடைந்த விக்கியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்