தூத்துக்குடியில்அனல் மின்நிலைய தொழிலாளர்கள்திடீர் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் திங்கட்கிழமை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-13 18:45 GMT

தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல் மின்நிலையம்

தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து என்.டி.பி.எல். அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வேலைநிறுத்தம்

இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் என்.டி.பி.எல். நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல். அனல் மின்நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனல் மின்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மின்உற்பத்தி பாதிக்கப்படும்

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு என்.டி.பி.எல். கிளை செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ரசல் கண்டன உரையாற்றினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்