தூத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜூன் மாதம் முழுமையாக முடிவடையும்:கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜூன் மாதம் முழுமையாக முடிவடையும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-04-02 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் வருகிற ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

ஆய்வ கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், பூங்கா பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் தற்போதைய நிலை குறித்து கனிமொழி எம்.பி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜூன் மாதம்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் ரூ.1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ரூ.952 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. இதில் வி.வி.டி மெயின் ரோடு உள்ளிட்ட சில பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. மேலும், பெரும்பாலான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மிகவும் தாமதமான நிலையில் நடைபெற்று வந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக விரைவுபடுத்தி முடிவுறும் நிலைக்கு கொண்டு வந்து உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்