தூத்துக்குடியில்பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்பு

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டார்.

Update: 2023-03-16 18:45 GMT

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

குறைகேட்பு

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் கோரியும் அமைச்சரிடம் நேரில் மனு அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெந்நீர்

ம.தி.மு.க மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மகாராஜன் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த மனுவில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் தாய்மார்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் வெந்நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மகப்பேறு வார்டும், பிணவறையும் மிக அருகில் இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, பிணவறையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், இந்த பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நூலகத்தில்...

இதேபோன்று மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ராம்சங்கர், 2-ம் நிலை நூலகர் சங்கரன் ஆகியோர் அமைச்சரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டமைய நூலகத்தின் முதல் தளத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும். நூலக வளாகத்தில் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து மாலையில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அவர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

நிகழ்ச்சிகளில் தி.மு.க மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்