தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது
தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் உள்ள 12 பேட்டரிகளை கடந்த 24-ந் தேதி யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று விட்டாராம். இது குறித்து செல்போன் கோபுரம் காவலாளி சிதம்பரம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் மகன் பரமானந்தம் (வயது 47) சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் மெயின் ரோட்டை சேர்ந்த ஏசுதாஸ் மகன் அருள் ராஜா (42) என்பவர் செல்போன் கோபுரத்தில் இருந்த பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அருள்ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகள், 2 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.