தூத்துக்குடியில்ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-28 18:45 GMT

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

போராட்டம்

அதன்படி தூத்துக்குடியில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை, கூட்டுறவு, சுகாதாரத்துறை, வளர்ச்சி பிரிவு, மீன்வளத்துறையை சேர்ந்த ஊழியர்கள் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 150 பேர் உள்பட மொத்தம் 540 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்