தூத்துக்குடியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்களுக்கு அவ்வையார் விருது
தூத்துக்குடியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுவதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்கள் அவ்வையார் விருது பெற வருகிற டிச.12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எந்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அவ்வையார் விருது
2023-ம் ஆண்டுக்கான உலக மகளிர் தினவிழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
இந்த தகுதி உடையவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.12.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்தபின் விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் குறித்து 1 பக்கஅளவில் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்து (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தொலைப்பேசி எண்:0461-2325606 என்ற முகவரிக்கு வருகிற 12.12.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.