தூத்துக்குடியில் 60 கி.மீ. வேகத்தில் வீசியகாற்றுக்கு மரங்கள் சாய்ந்தன

தூத்துக்குடியில் 60 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT

தூத்துக்குடியில் நேற்று 60 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்து விழுந்தன. இதனால் அழகேசபுரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த காற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்தது. மேலும், பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பருவக்காற்று வீசத் தொடங்கியது. அவ்வப்போது லேசான காற்று வீசி வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக காற்று வீசி வருகிறது. நேற்று காலையில் இருந்து காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று காலையில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று, மெல்ல மெல்ல அதிகரித்து 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசியது. ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. இதனால் தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த காற்று காரணமாக ஆங்காங்கே விளம்பர பலகைகள் சேதம் அடைந்தன.

மரங்கள் சரிந்தன

அதே போன்று தூத்துக்குடி அழகேசபுரம் மற்றும் வி.வி.டி. நினைவு பள்ளி அருகிலும், மெயின் ரோட்டிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையில் விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் மின்சார ஒயர்களும் அறுந்து பழுதடைந்தன. உடனடியாக அலுவலர்கள் அதனை சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்