தூத்துக்குடியில் மினி லாரியில் கடத்திய 2,200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்

தூத்துக்குடியில் மினி லாரியில் கடத்திய 2,200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-13 18:45 GMT

தூத்துக்குடியில் விசைப்படகுகளுக்கு விற்பனை செய்வதற்காக மினி வேனில் கடத்திச்சென்ற 2 ஆயிரத்து 200 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலப்பட டீசல்

தூத்துக்குடியில் விசை படகுகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு சட்டவிரோதமாக கலப்பட டீசல் மற்றும் பயோ டீசலை கடத்தி சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பீச் ரோட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அந்த வேனில் எவ்வித ஆவணமும் இன்றி கலப்பட டீசலை பேரல்களில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினிவேனுடன் 11 பேரல்களில் இருந்த கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மினி வேனை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி ராஜாராம் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துசுந்தர் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரையும், கலப்பட டீசல் பேரல்களையும் தனிப்பிரிவு போலீசார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து அந்த பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர். இதில், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த செல்லையா மகன் செந்தூர்பாண்டி (44) மற்றும் மினி லாரி உரிமையாளரான வாகைகுளம் கீழத்தெரு பேச்சிமுத்து மகன் ஆனந்தராஜ் (35) ஆகியோருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏற்கனவே சிக்கிய மினிவேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேரையும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பஸ்நிறுத்தம் பின்புறமுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கலப்பட டீசலை பதுக்கி வைத்து, மினிவேனில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்