தூத்துக்குடியில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தூத்துக்குடியில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-07 02:52 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த (31.10.2023) அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிய விபத்தில் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த லசிங்டன் (வயது 35) மற்றும் அலெக்ஸ்சாண்டர் (வயது 34) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்கள்.

மேலும் வசந்தன் ப்ரீஸ் (வயது 33) என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், மூளைச்சாவு அடைந்த வசந்தன் ப்ரீஸ் என்பவரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்களால் தானம் செய்ய முன்வந்ததன் அடிப்படையில் (6.11.2023) அன்று உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளன, தமிழ்நாடு அரசு அவரது தியாகத்தை போற்றுகிறது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்