தூத்துக்குடி கடலில் பெண் சிசு பிணம் வீச்சு

தூத்துக்குடி கடலில் பெண் சிசு பிணம் வீசப்பட்டுள்ளது. பெண் சிசு கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-06 11:09 GMT

தூத்துக்குடி கடலில் பெண்சிசு பிணம் வீசப்பட்டது. அதை கொலை செய்து வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தை

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்காக நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆங்காங்கே மக்கள் ஓய்வு எடுப்பதற்காக நிழற்குடையும் உள்ளது.

நேற்று காலையில் வழக்கம் போல் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரை ஓரத்தில் தண்ணீரில் ஒருசிறிய பொம்மை மிதப்பது போன்று இருந்தது. இதனை கூர்ந்து கவனித்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்சிசு

இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த குழந்தை பிணத்தை மீட்டனர். அப்போது, அது பெண்சிசு என்பது தெரியவந்தது. மேலும் பிறந்து சிலமணி நேரத்தில் கடலில் வீசி இருப்பதும், தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து போலீசார் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையா?

கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தை பிறந்ததால் யாரேனும் கடலில் வீசி கொலை செய்தனா?, இறந்து பிறந்ததால் யாரேனும் வீசிச் சென்றனரா? அந்த பெண்சிசுவின் தாய் எங்கே? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த பெண்சிசு எப்படி இறந்தது என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்