தூத்துக்குடி மாவட்டத்தில்பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கதர், பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.
ஆய்வு
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில், தூத்துக்குடியில் உள்ள கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியில் ஆய்வு செய்தார். அங்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளன நிறுவனத்தில் ஆய்வு செய்தார்.
நடவடிக்கை
அப்போது, காதிகிராப்ட் விற்பனை அங்காடியில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, அதன் தரம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் காதி கிராப்ட் தயாரிப்பான உள்ள குமரி சோப் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கதர் மற்றும் பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆய்வின் போது, கதர் கிராம தொழில்கள் துணை இயக்குனர் அருணாச்சலம், உதவி இயக்குனர் பாரதி, நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளன மேலாண்மை இயக்குனர் சரவணக்குமார், காதிகிராப்ட் விற்பனை அங்காடி மேலாளர் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.