திருவாரூரில், பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதாக கூறி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதாக கூறி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பருத்தியில் அதிக அளவில் லாபம் கிடைத்ததால், இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பருத்தி சாகுபடி தொடங்கிய சில நாட்களிலேயே மழை பெய்து அவற்றை வீணாக்கியது. தொடர்ந்து வெயில் அடித்ததால் பாதிப்புகள் குறைந்து பருத்தி செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் பெய்த மழையால் பருத்தி செடிகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்
இவ்வாறு பாதிக்கப்பட்ட பருத்தியை உரம் மற்றும் இடுப்பொருட்கள் கொடுத்து காப்பாற்றி அறுவடை செய்தனர். அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்ய விவசாயிகள் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். இங்கு நேற்று பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.
பருத்தியை கொள்முதல் செய்ய ஆந்திரா, கேரளா, கோவை, கும்பகோணம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு பருத்தியை ஒரு கிேலா ரூ.120-க்கு கொள்முதல் செய்த நிலையில், இந்த ஆண்டு கடந்த வாரம் வரை கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நேற்று பருத்தி கிலோ ரூ.50-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது.
சாலை மறியல்
குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதாக கூறி விவசாயிகள் நேற்று திடீரென நாகை பைபாஸ் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்தது. ஏற்கனவே கோடை மழையால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்படுவதால் நஷ்டம் ஏற்படும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருவாரூர்-நாகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.