திருப்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது
திருப்பூரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் இறந்து விட்டதால், தனது 15 வயது மகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்குமார் (வயது 30) என்பவர் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சிறுமிக்கும், அர்ஜூன்குமாருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. கடந்த 11-ந் தேதி அந்த சிறுமி தனது தாயாரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவள் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீட்டில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. மறுநாள் அந்த சிறுமி வீட்டுக்கு வந்தாள். அவளிடம் விசாரிக்கையில் அர்ஜூன்குமார் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஆகியோர், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் அர்ஜூன்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.