திருச்செந்தூர் தாலுகாவில்குளங்களை தூர்வாரி, மடைகளை சீரமைக்க கோரிக்கை

திருச்செந்தூர் தாலுகாவில் அனைத்து குளங்களையும் தூர்வாரி, மடைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-12 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் தாலுகாவில் அனைத்து குளங்களையும் தூர்வாரி, மடைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் சங்க மாநாடு

விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு, திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் நடந்தது. தாலுகா தலைவர் நடேச ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், தாலுகா செயலாளர் சின்னராஜா, மாநில குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் நகர செயலாளர் கந்தசாமி மாநாட்டு கொடியேற்றினார்.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், கோட்டை நடராஜன், ஏரல் தாலுகா தலைவர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளங்களை தூர்வார வேண்டும்

மாநாட்டில், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து குளங்களையும் தூர்வாரி, மடைகளை சீரமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். குரும்பூர் அங்கமங்கலத்தில் கொடுத்த வீட்டுமனைகளை சுற்றிலும் அடைத்து கட்டப்பட்டுள்ள வேலியை அப்புறப்படுத்த வேண்டும். குரும்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட அந்தஸ்துக்கு தரம் உயர்த்திட வேண்டும். திருச்செந்தூர் நகராட்சியில் உயர்த்தியுள்ள வீட்டு வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க உறுப்பினர் மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்