தூத்துக்குடியில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது

தூத்துக்குடியில் கோர்ட்டு அருகில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தந்தை மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-21 11:31 GMT

தூத்துக்குடியில், பட்டப்பகலில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 55). விவசாயி.

இவருடைய மகன் காசிராஜன் (36). டிரைவர். இவருடைய மனைவியிடம் தமிழழகன் தவறாக நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாக தமிழழகன், மகன் காசிராஜனுக்கு சொத்துக்களை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மேலும் தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காசிராஜனின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து சொத்து பிரச்சினை காரணமாகவும், தனது வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் நினைத்து விரக்தி அடைந்த காசிராஜன், அவ்வப்போது தமிழழகனை தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் தமிழழகன் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் பதிவு செய்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனால் தமிழழகன் தனது உறவினர்கள் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்த கடல்ராஜா (45), தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த காசிதுரை (31) ஆகியோருடன் காரில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார். இவர்கள் காரை கோர்ட்டுக்கு எதிரே மணிநகர் 1-வது தெருவில் நிறுத்தினர். பின்னர் தமிழழகன் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் காருக்கு வந்தார்.

அவர் காரில் ஏற முயன்றபோது, அங்கு வந்த காசிராஜன், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தந்தை தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் தாக்கினார். இதில் 3 பேருக்கும் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட 3 பேரும் காசிராஜனை திருப்பி தாக்கினர். பின்னர் காசிராஜன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் காசிராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து காயம் அடைந்த தமிழழகன் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்கள் கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் கோர்ட்டு அருகே நடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-------------------------

Tags:    

மேலும் செய்திகள்