தேனியில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பள்ளி, குடியிருப்புகளில் ஒரு மாதமாக சூழ்ந்துள்ள தண்ணீர்

தேனியில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பள்ளி, குடியிருப்புகளை ஒரு மாத காலமாக தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பேரிடர் மற்றும் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-03 18:45 GMT


தேங்கி நிற்கும் மழைநீர்

தேனியில் சுமார் 2½ கிலோமீட்டர் நீளமுள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இடைப்பட்ட காலங்களில் தூர்வாரும் பணியை மேற்கொண்டாலும் சில நாட்களில் பணிகள் முடங்கி விடுகின்றன. இதனால், நகரின் முக்கிய பிரச்சினையாக இந்த வாய்க்கால் உள்ளது. நகர் பகுதியில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்லும் ஒரே வாய்க்காலாக இது திகழும் நிலையில், பல இடங்களில் வாய்க்கால் தூர்ந்து போயும், ஆக்கிரமிப்பால் குறுகியும் காட்சி அளிப்பதால், மழைநீர் வடிந்து செல்ல முறையாக வடிகால் வசதி இல்லை.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தேனியில் பலத்த மழை பெய்து பழைய பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல மணி நேரத்துக்கு பிறகு இந்த மழைநீர் வடிந்தது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பங்களாமேடு, சுப்பன்தெரு திட்டச்சாலையோர பகுதிகளில் குடியிருப்புகளின் வழியாக மழைநீர் ஓடியது. பின்னர், குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கியது. இடையில் சில நாட்கள் மழை பெய்ததால் மழைநீர் தேங்கி குளமாக காட்சி அளிப்பதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

பேரிடர் அபாயம்

வாய்க்கால் கரையோரம் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியை சுற்றியும், பள்ளி வளாகத்திலும் ஒரு மாத காலமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. தினமும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் தேங்கிய நீரில் இறங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர். நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீரில் நீர்த்தாவரங்களும் வளர்ந்து படர்ந்துள்ளன.

அப்பகுதியில் உள்ள வணிக கட்டிடங்கள், குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்து குளமாக காட்சி அளிக்கிறது. இதனால், கட்டிடங்கள் வலுவிழந்து பேரிடர் நிகழும் அபாயம் உள்ளது.

எம்.எல்.ஏ. ஆய்வு

இந்நிலையில், மதுரை சாலை, பங்களாமேடு பகுதியில் ராஜவாய்க்காலை பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமையில் நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வாரும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்