தேனி ரெயில் நிலைய வளாகத்தில்குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி:கொக்கு பிடிக்க சென்றபோது பரிதாபம்

தேனி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கொக்கு பிடிக்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-05-20 18:45 GMT

7-ம் வகுப்பு மாணவர்கள்

தேனி சமதர்மபுரம் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

உடல்கள் மீட்பு

அப்போது அவர்கள் ஓட்டி வந்த சைக்கிள், தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டை அருகில் நின்றது. இதனால் குட்டையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களின் உறவினர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இரவு 11 மணியளவில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். அதிகாலை 3 மணி வரை தேடிப் பார்த்தும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது.

இந்நிலையில் காலை 8 மணியளவில் குட்டைக்குள் இருந்து சிவசாந்தன், வீரராகவன் இருவரின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன. இரு உடல்களையும் பார்த்து அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

கொக்கு பிடிக்க சென்றபோது...

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்ற போது தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இதற்கிடையே 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆபத்தை சுட்டிக்காட்டிய 'தினத்தந்தி'

தேனி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்டையானது ஆபத்தான நிலையில் உள்ளது. குட்செட் அமைப்பதற்காக மண் அள்ளியதால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து குட்டையாக உருவாகி இருக்கிறது. அந்த குட்டையில் ஏற்கனவே ஒரு முதியவர் பலியாகி இருக்கிறார். கால்நடைகளும் பலியாகி உள்ளன. இருப்பினும் தினமும் இங்கு குளிப்பதற்காக பலர் வருகின்றனர். ஆபத்தான முறையில் குளிக்கின்றனர்.

இந்த குட்டையை மூட வேண்டும் அல்லது குட்டையை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த குட்டையால் விபரீதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்துகளுடன் 4 மாதங்களுக்கு முன்பே 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இந்த ஆபத்தின் தீவிரத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டனர். அந்த அலட்சியமே, 2 மாணவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்