தேனி அல்லிநகரத்தில்குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி:சித்திரை திருவிழாவுக்கு முன் சீரமைக்கப்படுமா?

தேனி அல்லிநகரத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சித்திரை திருவிழாவுக்கு முன் சாலை சீரமைக்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-03-30 18:45 GMT

உருக்குலைந்த சாலை

தேனி அல்லிநகரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் செல்லும் வழியில் இருபுறமும் மாந்தோப்புகள், தென்னந்தோப்புகள் மற்றும் விவசாயி நிலங்கள் உள்ளன. தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விவசாய நிலங்களுக்கும் ஏராளமான விவசாயிகள் அன்றாடம் சென்று வருகின்றனர்.

அல்லிநகரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் சாலை உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆட்டோக்கள், கார்களில் செல்பவர்களும், விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சீரமைக்கப்படுமா?

பிரசித்தி பெற்ற வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவுக்கு நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1-ந்தேதி இங்கு நடக்கும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வார்கள். சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்படும். மக்கள் சாலையில் நடந்து சென்று தரிசனம் செய்வதும் வழக்கம்.

எனவே திருவிழாவுக்கு முன்பு போர்க்கால நடவடிக்கையாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்பட்டால் பக்தர்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும். இல்லையெனில் சிரமங்களை சந்திப்பதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்