வருகிற நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜனதா இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டத்தில் பேசினார்.

Update: 2023-08-30 18:45 GMT

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இயக்கத்துக்கு வலுசேர்க்க வேண்டும். தி.மு.க.வை எந்த வழியிலாவது அழித்து விட வேண்டும் என்று மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா அரசு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். 40 தொகுதியிலும் தி.மு.க வெற்றி பெற வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பல்வேறு வகையில் மக்களை சந்தித்து வருகின்றனர்.

கொடிக்கம்பம்

வருகிற 4-ந் தேதி இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் மாணிக்கம் மகாலில் 10 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும், புதுக்கோட்டையில் இளைஞர் அணி கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். இளைஞர் அணி கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள வேண்டும். இதற்காக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் புதிய கொடிக்கம்பம் அமைக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சி ஊழல் இல்லாத கட்சி என்கிறார்கள். ஆனால் மத்திய தணிக்கை குழு ஏழரை லட்சம் கோடி ரூபாய் நிதி இழப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. பல்வேறு முறைகேடுகளை பா.ஜனதா அரசு செய்து உள்ளது. இந்தியா கூட்டணியால் மோடிக்கு பயம் வந்து விட்டது என்று கூறினார்.

கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 100 இடங்களில் புதிய கொடிக்கம்பம் அமைக்க வேண்டும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும். வருகிற 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வரும் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்