கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத முதல் பிரதோஷம் நேற்று நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற 16 வகையான அபிஷேக வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்து வைக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் மூலவர் மகுடேஸ்வரருக்கும் 16 வகையான அபிஷேக திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் உமா மகேஸ்வரர் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கு, கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்திக்கு, பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், மாதேசியப்பன் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.