சிவகளையில் மளிகை கடையில் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்
சிவகளையில் மளிகை கடையில் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்
ஏரல்:
சிவகளையில் மளிகைகடையில் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கடையில் திருடிய பணத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மளிகை கடையில் திருட்டு
ஏரல் அருகே உள்ள சிவகளை நாடார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 66). இவர் சிவகளை நடுத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். சுந்தர்ராஜ் கடந்த 7-ந்தேதி இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வரும்பொழுது கடை கதவின் பூட்டை உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மஞ்சள் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
வாலிபர் சிக்கினார்
இதுகுறித்து ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் சேகரன் வழக்கு பதிவு செய்து கடையில் திருடிய மர்மநபரை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரல் பஸ் நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், அங்கிருந்த போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். சந்தேகம் அடைந்த போலீசார் துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், சிவகளை ஆவாரங்காடு சிவலிங்கம் மகன் பால்ராஜ் (வயது 35), டிராக்டர் டிரைவர் என்றும், சுந்தரராஜ் மளிகை கடையில் பணம் திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருடிய பணத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.