சுட்டெரித்த வெயிலில், மாணவனை முட்டிப்போட வைத்த ஆசிரியர்

நத்தம் அருகே, பள்ளிக்கு தாமதமாக வந்ததால் சுட்டெரித்த வெயிலில் மாணவனை முட்டிப்போட வைத்த அரசு பள்ளி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-14 16:35 GMT

 தாமதமாக வந்த மாணவன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 1,600 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதனால் பிற வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மதியத்துக்கு பிறகு பள்ளிக்கு வந்தனர். இவர்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர்.

அதன்படி 10-ம் வகுப்பு படிக்கிற மாணவ-மாணவிகளை செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்று சிறப்பு வகுப்பு நடத்தினர். இதில் ஒரு மாணவர், தாமதமாக பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் ஒருவர் அந்த மாணவரை கண்டித்தார். மேலும் தாமதமாக வந்த மாணவரிடம் ஆசிரியர் காரணம் கேட்டார். ஆனால் மாணவனின் பதில் ஆசிரியருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

முட்டிப்போட வைத்த ஆசிரியர்

இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாக மணலில், அந்த மாணவனை ஆசிரியர் முட்டிப்போட வைத்தார். அப்போது வெயில் சுட்டெரித்தது. முட்டி போட்டப்படியே மாணவன் படித்து கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் சூடு தாங்க முடியாமல் மாணவன் கண்ணீர் விட்டு கதறி அழுதான். இருப்பினும் அந்த ஆசிரியரின் மனம் இரங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து முட்டிப்போட்டு அழுது கொண்டே இருந்தான்.

இதனை கண்ட ஒருவர், மாணவன் முட்டிப்போட்டதை ரகசியமாக புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம், தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்