பள்ளி வளாகத்தில்இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றம்
உத்தமபாளையம் அருகே இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
உத்தமபாளையம் அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 4 தென்னை மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் கூடுதல் கட்டிடம் கட்ட இடையூறாக இருப்பதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர், கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதியும், பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டவும் 4 தென்னை மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. கூறினார். மேலும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பள்ளி வளாகத்தில் இருந்த 4 தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதையடுத்து பள்ளி வளாக பகுதியில் மாணவர்களுக்கு இடையூறு இன்றி நிழல் தரும் மரங்களை நடவு செய்ய உள்ளோம் என்று கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்தனர்.