ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் பஸ் சிக்கியது
வள்ளியூரில் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பஸ் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பஸ் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மழைநீர் தேங்கியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியம் 3 மணியளவில் மேகங்கள் திரண்டு கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.
பஸ்சில் தவித்த பயணிகள்
அப்போது வள்ளியூரில் இருந்து விஜயநாராயணத்துக்கு மாலை 3 மணியளவில் சென்ற அரசு பஸ், ரெயில்வே சுரங்கப்பாதையின் நடுவில் தேங்கிய தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, பஸ்சில் தவித்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். பழுதாகி நின்ற பஸ்சையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தெற்கு வள்ளியூர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றனர்.