அ.தி.மு.க.ஆட்சியில் மருந்துகள் வாங்கியதில் ரூ.7 ஆயிரம் கோடி வரை ஊழல்

அ.தி.மு.க.ஆட்சியில் மருந்துகள் வாங்கியதில் ரூ.7 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக சோளிங்கர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தபின் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

Update: 2022-07-25 18:31 GMT

வாலாஜா 

அ.தி.மு.க.ஆட்சியில் மருந்துகள் வாங்கியதில் ரூ.7 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக சோளிங்கர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தபின் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

பொது கணக்கு குழு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் அதன் தலைவரான ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் செல்வபெருந்தகை தலைமையில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த குழுவில் உறுப்பினர்களான சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோயில்), வேல்முருகன் (பண்ருட்டி), பிரகாஷ் (ஓசூர்), பேராசிரியர் ஜவாஹிருல்லா (பாபநாசம்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்), இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களுடன் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உள்பட அதிகாரிகள் வந்தனர்.

நேடி கள ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் தணிக்கைத் துறை தலைவரால் தணிக்கை துறை தொடர்பாக சுட்டிக்காக்கப்பட்டுள்ளவை குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விசாரித்தனர்.

அதன்படி வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவினை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவமனையில் மின்தடையின்போது தானாக ஜெனரேட்டர் இயங்கும் வகையில் உள்ள வசதி செயல்படாததை பார்த்து அதிருப்தி அடைந்த அவர்கள் அவசர சிகிச்சை நோயாளிகள் இந்நேரங்களில் பிரச்சினைக்குள்ளாக மாட்டார்களா? என கேள்வி எழுப்பினர்.

ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை மற்றும் உறுப்பினர்கள் உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், டாக்டர்கள் உடன் இருந்தனர்.

சோளிங்கர்

இதனை தொடர்ந்து குழுவினர், சோளிங்கர் பஸ் நிலையத்தில் உள்ள கஞ்சா சாகிப் கல்லறையை மேம்படுத்துவதற்காக அதனை ஆய்வுசெய்தனர். பின்னர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழு தலைவர் செல்வ பெருந்தகை, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் வாங்குவதில் கணினி முறையில்பதிவு செய்யாமல் பதிவேடு முறையில் பதிவு செய்து ரூ.700 கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இதுபோன்று நடைபெறாமல் இருக்க மருத்துவத்துறை அதிகாரியிடமும் மருந்தாளுனரிடமும் கணினி முறையில் தான் மருந்து தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதிகள் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.

இதனைத் தொடர்ந்து இக்குழு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்ம சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ரோப்கார் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், சோளிங்கர் நகர மன்ற உறுப்பினர்கள் டி கோபால், அருண்ஆதி, சிவானந்தம், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்