பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி கலெக்டர் தகவல்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-19 18:45 GMT

புதிதாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு உருவாக்கவும், ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிடவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் ஆகிய அலுவலகங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் குறுந்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான இலக்கீடு 201 தொழில் முனைவோர்களுக்கு மானியத் தொகை ரூ.585 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பீடு

இதில் கடன் பெறுபவர்களுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தி தொழில் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேலும், சேவைத் தொழில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு மேலும் இருப்பின் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதும் கிடையாது. அதிகபட்ச கடன் தொகையாக உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும். இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீத தொகையினை பொதுப்பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீத விளிம்புத் தொகை செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பங்கள்

இத்திட்டத்தில் அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த சுற்றுப்புற சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் நேர்முக தேர்வின்றி வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தற்போது நேரடி விவசாயம் தவிர மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், ஆடு, மாடு, கோழி, மீன் பண்ணைகள் வைத்தல், தேனீ வளர்த்தல், பட்டுப்புழு வளர்த்தல் ஆகிய தொழில்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. மேலும், பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா வேன் மற்றும் வேன் ஆகியவற்றுக்கும் மொத்த இலக்கீட்டில் 10 சதவீதத்திற்கு மிகாமல் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படும்.

இணையதள முகவரி

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.kviconline.gov.inஎன்ற இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது ஏஜென்சி டி.ஐ.சி. என தேர்வு செய்ய வேண்டும். எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04142- 290116 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்