கடந்த அதிமுக ஆட்சியில், திட்டங்களுக்கு சரியாக நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில், திட்டங்களுக்கு சரியாக நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-11-13 08:44 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தடந்தர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

சைதாப்பேட்டை, அண்ணா சாலை, ஜோன் சாலை வரை 200 மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கிண்டியில் இரண்டு இடங்களில் மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான திட்டப்பணிகள் கட்டப்பட்டு முடிவடைந்துள்ளன. ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. பணிகள் முடிவடைய உள்ள நிலையில், எதிர்பாராத அளவு இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மழை பெய்ததால் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியில், அடையாறில் இணைக்கும் கால்வாய் பணிகள் மழையால் முடிவடையாமல் உள்ளது. இருப்பினும் அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் பணி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை சாலை சீரமைப்பு பணி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கும் தொய்வு இல்லை.

இந்த மழைநீர் வடிகால் திட்டங்கள் இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் இல்லை. முன்பே இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், திட்டங்களுக்கு சரியாக நிதி ஒதுக்கவில்லை. 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய், அரசாங்கத்திற்கு பெரும் பணம் மற்றும் கடன் சுமையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்