கம்பம் பகுதியில் ஆற்று நண்டு கிலோ ரூ.300-க்கு விற்பனை

கம்பம் பகுதியில் ஆற்று நண்டு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-06-13 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப் பெரியாறு மூலம் இருபோக சாகுபடி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது முதல் போக சாகுபடிக்காக கடந்த 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முல்லைப்பெரியாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீரில் மீன், நண்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனை விவசாயிகள் போட்டிபோட்டு பிடித்து வருகின்றனர். பின்னா் அந்த நண்டுகளை கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் விற்பனை செய்கின்றனர். இந்த நண்டுகளை குழம்பு மற்றும் சூப் வைத்து குடிப்பதால் மழைக்காலங்களில் வரக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்றவை சரியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நண்டு விற்பனை செய்பவர்கள் கூறுகையில், தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் நண்டுகள் அதிக அளவில் உள்ளன. கரையில் உள்ள பாறை இடுக்குகள், புதர்களில் கோழி கழிவுகளை வீசும் போது அதனை உண்பதற்காக வெளியே வரும் நண்டுகளை உயிருடன் பிடித்து ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்கிறோம். நாள் ஒன்றுக்கு 4 கிலோ வரை நண்டுகள் கிடைப்பதால் குடும்பத்துடன் சேர்ந்து நண்டுகளை பிடித்து வருகிறோம். இந்த நண்டுகளில் மருத்துவ குணம் உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்