திட்டங்குளத்தில்தற்காலிக தினசரி சந்தைக்கு அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் தற்காலிக தினசரி சந்தைக்கு அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் தற்காலிக தினசரி சந்தை செயல்பட அனுமதிக்க வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி வட்டார விவசாயிகள் கைகளில் காய்கறிகளுடன் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவன தலைவர் க.தமிழரசன் தலைமையில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கோவில்பட்டியில் நகராட்சி காய்கறி சந்தை இடிக்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்படும் என அறிவித்து செயல்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பிரச்சினையாக இருந்தது. இதனால் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் சொந்தமாக இடத்தை வாங்கி உள்ளனர். அதில் தற்காலிக சந்தையை செயல்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் திட்டங்குளத்தில் தற்காலிக சந்தை செயல்பட சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் அனுமதி மறுப்பு
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இ.பெஞ்சமின் பிராங்களின், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வக்கீல் என். ரவிக்குமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை என்று கூறி ேபாலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு
இதனை தொடர்ந்து நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பால்ராஜ் தலைமையில் செயலாளர் கே.செந்தூர்பாண்டியன் ஆகியோர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி புதிய கூடுதல் பஸ் நிலைய வளாகத்தை கனிமொழி எம்.பி., கலெக்டர் கி.செந்தில்ராஜ் ஆய்வு செய்து தற்காலிக சந்தையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். மொத்த வியாபாரிகள் அரசு ஒதுக்கிய தற்காலிக சந்தையில் வியாபாரம் செய்தால் காய்கறி தரமாட்டோம் என மிரட்டினர். தற்போது மதுரையில் இருந்து நேரடியாக காய்கறிகள் வாங்கி மக்களுக்கு குறைவான விலையில் நிறைவான சேவையை வழங்கி வருகிறோம். இதற்கிடையே, அனுமதி பெறாமல் செயல்பட்ட சந்தைக்கு அரசு அதிகாரிகள் தடை விதித்தனர். இதையடுத்து பல வியாபாரிகள் புதிய கூடுதல் பஸ் நிலைய வளாக தற்காலிக சந்தைக்கு வர தயாராக இருந்தும், அவர்களை செல்லவிடாமல் தடுத்து மிரட்டி வருகின்றனர்.
கோரிக்கை
இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கோவில்பட்டி புதிய கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு வியாபாரிகளையும், விவசாயிகளையும் வரவிடாமல் மிரட்டி வருபவர்கள் மீதும், அரசுக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீதும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.