தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,496 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,496 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

Update: 2023-02-11 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,496 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 4 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 12 அமர்வுகளில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 306 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 251 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.6 கோடியே12 லட்சத்து 73 ஆயிரத்து 454 ஆகும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 262 வழக்குகளில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 247 மதிப்புள்ள 3 ஆயிரத்து 245 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆக மொத்தம் 3 ஆயிரத்து 568 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3 ஆயிரத்து 496 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.8 கோடியே 12 லட்சத்து 701 ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் -சார்பு நீதிபதி பீரித்தா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்து லெட்சுமி, பணியாளர்கள் பால் செல்வம், நம்பிராஜன், சத்யா பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்