அருணாசலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு

தீப ‘மை’ வேண்டுவோர் செல்போன் எண், விலாசத்தை பதிவிடுங்க என்று அருணாசலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-01-07 16:04 GMT

தீப 'மை' வேண்டுவோர் செல்போன் எண், விலாசத்தை பதிவிடுங்க என்று அருணாசலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தீப 'மை' பிரசாதம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த மாதம் 6-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள், அதாவது கடந்த 16-ந்தேதி வரை மலை உச்சியில் காட்சி அளித்தது.

மறுநாள் அதிகாலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை கோவில் ஊழியர்களால் மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தயார் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் மூலம் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு தீப 'மை' திலகமிட்டது. இதையடுத்து கோவிலில் தீப 'மை' பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

போலி முகநூல் கணக்கு

இந்த நிலையில் முகநூலில் சிலர் திருஅண்ணாமலையார் கோவில் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி தீப 'மை' வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழு விலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள், உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம் என்று தீப 'மை' புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதில் பலர் அவர்களது விலாசத்தை பதிவு செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்ட போது, முகநூல் பதிவிற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. கோவில் நிர்வாகம் மூலம் தபால் துறை மூலமாக மட்டுமே தீப 'மை' பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. யாரோ பணம் சம்பாதிக்கும் நோக்கில் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்' என்றார்.

கோவில் பெயரில் போலியான முகநூல் கணக்கை உருவாக்கி பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்