தூத்துக்குடி அருகே நடுக்கடலில்படகு மூழ்கியதில் மீனவர் பலி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலியானார். படுகாயங்களுடன் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-19 18:45 GMT

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பரிதாபமாக இறந்தார். படகு மீது கப்பல் மோதியதா? என்பது குறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படகு மூழ்கியது

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், திரேஸ்புரத்தை சேர்ந்த சேக்முகமது (வயது 43), ஜெயபால் (45), அண்டோ (45) ஆகியோர் கடந்த 17-ந் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் திரேஸ்புரத்தில் இருந்து புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் காயல்பட்டினம் கொம்புதுறையில் இருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது படகு விபத்தில் சிக்கி மூழ்கியது. இதனால் படகில் இருந்த 3 பேரும் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.

மீனவர் பலி

நேற்று காலையில் கொம்புதுறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விரைந்து செயல்பட்டு ஜெயபால், அண்டோ ஆகியோரை பத்திரமாக மீட்டனர். சேக் முகமதுவை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

மீட்கப்பட்ட 2 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கப்பல் மோதியதா?

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார், மீட்கப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அந்த பகுதியில் சரக்கு பெட்டகம் ஏற்றி வந்த ஒரு கப்பல் படகின் மீது மோதியதாகவும், இதில் படகு சேதம் அடைந்து மூழ்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் ஏதேனும் கப்பல் வந்ததா? அந்த கப்பல் எங்கு சென்றது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கடலில் மூழ்கி பலியான சேக்முகமதுவின் உடலை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்