கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 700 குற்ற வழக்குகள் பதிவு-அதிகாரி தகவல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 700 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 700 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்
21-ம் நூற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி கால் பதித்து வருகின்றனர். ஆனாலும் இந்தியாவில் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பாக வீட்டை தாண்டி கல்வி நிலையங்கள் மற்றும் வேலைக்கு செல்லும்போது அதிக அளவில் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே சமயத்தில் பெண்கள் தங்களுக்கு மிகவும் தெரிந்தவர்களால் தான் அதிக அளவில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. இதற்காக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் தங்களது பெயர் வெளியில் தெரிந்து விடும் என்று அச்சப்படுகின்றனர்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் அலைமோதுகின்றனர்.
எனவே இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு தோற்றுவித்த அமைப்புதான் ஒன் ஸ்டாப் சென்டர் எனப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சகம், தேசிய அளவில், எல்லா மாநிலங்களிலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பதற்கான நிதியை ``நிர்பயா நிதியிலிருந்து" ஒதுக்கி உள்ளது.
இதற்கான `சகி' எனும் திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மைய நிர்வாகி ஹெலனா கூறியதாவது:-
700 குற்ற வழக்குகள் பதிவு
தமிழகத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள், கற்பழிப்பு, ஆணவக் கொலைகள், ஆசிட் வீச்சு, கடத்தல், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை எனப் பல பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எனவே அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் இங்கு வந்தால், உடலில் காயங்கள் இருந்தால் முதலில் சிகிச்சையும், அதன் பின்னர் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறையில் 5 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். தேவையான காவலாளிகள் பாதுகாப்பு மற்றும் சமைத்து சாப்பிட அறைகள் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த மையம் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் இதுவரை பெண்களுக்கு எதிராக நடந்த 700 சம்பவங்கள் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 692 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டால் 181 என்ற எண்ணுக்கு தைரியமாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது இந்த அலுவலகத்திற்கு நேரில் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.