தங்கும் விடுதி குளியலறையில் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த ஊழியர் கைது
மசினகுடியில், தங்கும் விடுதி குளியலறையில் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.;
ஊட்டி: மசினகுடியில், தங்கும் விடுதி குளியலறையில் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கேரள தம்பதி
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சுற்றுலா சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சுற்றுலா சீசனும் நடக்கிறது. அதன்படி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் பேர் நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இதற்கிடையே நீலகியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதத்தில் அதிக அளவில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை இல்லை, மேலும் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால் நீலகிரியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
இந்தநிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் தம்பதி நேற்று முன்தினம் நீலகிரிக்கு சுற்றுலா வந்தனர். இந்த தம்பதியினர் மசினகுடி அடுத்த ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
செல்போனில் வீடியோ எடுத்தார்
இதில் கணவருடன் வந்த இளம்பெண், கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது குளியலறை ஜன்னலின் மறைவான பகுதியில் இருந்தவாறு வாலிபர் ஒருவர், இளம்பெண்ணை செல்போனால் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவரும், விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளும் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
கைது
அதில் அவர், தனது செல்போனால் குளியலறையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்ததும், மசினகுடியை சேர்ந்த ஷிண்டு(வயது 22) என்பதும், இதே தனியார் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து குளியலறையில் இளம்பெண்ணை மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்த ஷிண்டுவை, மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி இந்திய தண்டனை சட்டம் 354 (சி)(பெண்ணின் தனிப்பட்ட நடத்தையை படம் பிடித்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன் பின்னர் கூடலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மசினகுடி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் விடுதியில் தங்கி செல்லும் நிலையில், குளியலறையில் இளம்பெண் ஒருவரை மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்த ஊழியரால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோவை மீட்டு எடுத்த போலீசார்
தனியார் விடுதி குளியலறையில் கேரள இளம்பெண், தன்னை யாரோ வீடியோ எடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே சத்தம் போட்டார். இதையடுத்து இளம்பெண்ணை வீடியோ எடுத்த தங்கு விடுதி ஊழியர் ஷிண்டு உடனடியாக செல்போனில் வீடியோவை அழித்து விட்டார். இதனால் புகாரின்போது போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அவரது செல்போனில் எந்த வீடியோவும் இல்லாததால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அதில் அவர், செல்போனில் வீடியோவை அழித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்களிடம் இருந்த பிரத்யேக மென்பொருள் மூலம் அவரது செல்போனில் அளிக்கப்பட்ட வீடியோவை மீண்டும் எடுத்த போது, அதில் குளியலறையில் இருந்த இளம்பெண்ணின் வீடியோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷிண்டுவை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்தனர். மேலும் இதுபோல் தங்கும் விடுதியில் வந்து தங்கி சென்ற பல பெண் சுற்றுலா பயணிகளையும் வீடியோ எடுத்தாரா என்ற சந்தேகத்திலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.