ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள கத்திரிமலை கிராமத்துக்கு ரூ.1½ கோடியில் சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் மகிழ்ச்சி
கத்திரிமலை கிராமத்துக்கு ரூ.1½ கோடியில் சாலை
ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள கத்திரிமலை கிராமத்துக்கு ரூ.1½ கோடியில் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கத்திரிமலை கிராமம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்டது கத்திரிமலை. ஈரோடு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக உள்ள கத்திரிமலை கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 76 வீடுகள் உள்ளன. பெரியவர்கள், குழந்தைகள் என 280-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் இந்த கிராமத்தை மலைத்தீவு என்று சொன்னால் மிகையாகாது.
அந்த அளவுக்கு தனித்து விடப்பட்ட கிராமமாக இது இருந்தது. 21-ம் நூற்றாண்டிலும் மின்சாரம் இல்லாத தமிழக குக்கிராமங்களில் ஒன்றாக இது உள்ளது.
ரூ.1½ கோடியில் சாலை
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியின் நடவடிக்கையால் கத்திரிமலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணியை கடந்த ஜனவரி மாதம் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் அதிகாரிகள் அதிரடி பணியை தொடங்கினார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் மலையில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
45 கொண்டை ஊசி வளைவுகள்
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் மேற்பார்வையில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவசங்கரன், சரவணன் ஆகியோர் வழிகாட்டுதலுடன் ஒன்றிய உதவி பொறியாளர் கே.சிவபிரசாத் தலைமையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
கத்திரிமலையின் அடிவாரமான கத்திரிப்பட்டி கிராமத்தில் இருந்து (இந்த கிராமம் சேலம் மாவட்ட எல்லையாகும்) கத்திரிமலைக்கு 8.1 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டு உள்ளது. இதில் மலை மட்டும் 6.3 கிலோ மீட்டர் ஆகும். இந்த மலைப்பாதையில் 45 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தற்போது 8.1 கிலோ மீட்டருக்கு மண் ரோடு தயாராகி உள்ளது. இதனால் 8 கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து மலையை கடந்து வந்த கத்திரிமலை மக்கள் வாகனங்களில் பயணம் செய்யும் வசதியை பெற்று உள்ளனர்.
தார் ரோடாக மாற்ற பரிந்துரை
மண்சாலை போடும் பணி நிறைவுற்ற நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சிவபிரசாத் நேற்று சோதனையில் ஈடுபட்டார்.
சாலையின் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்ப இடவசதி உள்ளதா?. சாலைக்கான அகலம் அளவு சரியாக உள்ளதா? என்பதை சோதனை செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, தமிழக முதல்-அமைச்சரின் நேரடி கவனத்தில் இந்த பணி நடக்கிறது. இதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் முழு முயற்சி செய்து மலைவாழ் மக்களுக்கு மிகப்பெரிய உதவி செய்து உள்ளார். வனத்துறையும் போதிய உதவிகளை செய்து இருக்கிறது. தற்போது கரடு, முரடான பாறைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பாதையாக உருவாக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஜல்லி போடப்பட உள்ளது. கொண்டை ஊசி வளைவுகளில் கான்கிரீட் போடப்படும். இதனால் சாலை பாதுகாப்பானதாக அமையும். இந்த ரோடு முழுமையான தார் ரோடாக மாற்றவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
70 ஆண்டுகளாக...
கத்திரிமலை கிராமத்தை சேர்ந்த கிரியன் என்பவர் கூறியதாவது:-
நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். மாதம்பட்டி, மலையம்பட்டி என 2 கிராமங்கள் உள்ளன. எங்களுக்கு ரோடு வசதி என்பதே கிடையாது. யாருக்காவது மருத்துவ சேவை தேவை என்றால் தொட்டில் கட்டி சுமந்து வர வேண்டும். சமவெளியாக இருந்தால் பரவாயில்லை. சுமார் 8 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான மலையில் நடக்க வேண்டும். காட்டு விலங்குகள், கரடுமுரடான ஒற்றையடி பாதையில் தனியாக நடப்பதே இயலாது என்கிற போது, நோயாளிகளை சுமந்து கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிப்பது எத்தனை சிரமம். ரேஷன் வாங்கவோ, வெளியூர் செல்லவோ எதுவாக இருந்தாலும் மலையில் இறங்கி ஏற வேண்டும்.
சுமார் 70 ஆண்டுகளாக எங்களுக்கு ரோடு வசதி வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் இப்போது எங்கள் கோரிக்கை நிறைவேறுகிறது. இப்போது டிராக்டர், பிக் அப் சரக்கு வேன் ஆகியவை வருகின்றன. இனிமேல் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மலைகளில் உள்ள சாலைகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலம் அல்லது அதற்கு முந்தைய காலத்தில் போடப்பட்டவையாக உள்ளன. ஆனால் முதல் முறையாக தமிழக அரசு ஈரோடு மாவட்டம் கத்திரிமலையில் மலைப்பாதை அமைத்து உள்ளது. இந்த பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலான குழு சாதித்து காட்டி சாதனை படைத்து உள்ளது.