மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினாா்.

Update: 2023-09-08 22:38 GMT

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கண்காணிப்பு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, 'மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம், முன்னேற்றம், திட்டங்கள், பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

2 ஆயிரம் பேருக்கு...

இதேபோல் தமிழக அரசின் சார்பில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டம் ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.

கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்