வீராணம் ஏரியில் டிரைவர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் 5 மாதத்துக்கு பிறகு கள்ளக்காதலனுடன் மனைவி கைது மது வாங்கி கொடுத்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றது அம்பலம்
வீராணம் ஏரியில் டிரைவர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 5 மாதத்துக்கு பிறகு கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள காந்தியார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). டிரைவரான இவர், வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். 10 நாட்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இவரது மனைவி தீபா(33). இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தனது வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற சக்திவேல், வீராணம் ஏரியில் பிணமாக மிதந்தார்.
இது குறித்து அவரது தாய் பத்மா (73) புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கில் சரண்
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மதியம் புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம், டிரைவர் சக்திவேலை கொலை செய்ததாக வில்வகுளத்தை சேர்ந்த சுகுமார் (49) என்பவர் சரணடைந்தார்.
இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் ராஜா புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சுகுமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
வட்டிக்கு கொடுத்ததில் தொடர்பு
நான், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறேன். இதில் காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி தீபாவுக்கும் கடன் கொடுத்தேன். இந்த கடனை வாங்க சென்றபோது எனக்கும், தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளளக்காதலாக மாறியது. இதன் பின்னர் நாங்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்.
சக்திவேல், வெளியூர் சென்று வேலை பார்த்ததால், 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். இதை பயன்படுத்தி, அவரது வீட்டிலேயே நான் தீபாவுடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.
கொலை செய்ய திட்டம்
இந்த நிலையில், கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்று நாங்கள் கருதினோம். மேலும் கள்ளக்காதலுக்கு அவர் இடையூறாக இருப்பார் என்று நினைத்தோம். எனவே அவரை கொலை செய்ய தீபாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினோம். அதன்படி கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி சொந்த ஊருக்கு வந்திருந்த, சக்திவேலை அன்றைய தினம் இரவு எனது நண்பர்களான தொரப்பு கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் சக்திவேல், ஷண்டன் கிராமத்தை சேர்ந்த ஜான் மகன் சிலம்பரசன் ஆகியோருடன் மதுகுடிக்க காரில் அழைத்து சென்றேன். வீராணம் ஏரிக்கரையில் உள்ள கலியமலை பகுதியில் வைத்து, சக்திவேலுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்தோம்.
கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை
இதில் சக்திவேலுக்கு போதை தலைக்கு ஏறியதும் நான், காரின் சீட்டு கவரை கழட்டி அவர் தலையில் மாட்டி கயிற்றால் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். எனது நண்பர்கள் கை, கால்களை பிடித்துக் கொண்டனர். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி சக்திவேல் இறந்து விட்டார்.
உடனடியாக அவருடைய உடலை வீராணம் ஏரியில் வீசிவிட்டு சென்று விட்டோம். வீராணம் ஏரியில் போதையில் குளித்தபோது சக்திவேல், மூச்சு திணறி இறந்து விட்டார் என்று நாடகமாட முயன்றோம்.
ஆனால் சக்திவேல் கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கிக் கொள்வேன் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.
இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.
2 பேர் கைது
இதையடுத்து சுகுமாரையும், தீபாவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகுமாரின் நண்பர்கள் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சுகுமாரின் மனைவி சசிகலா கடந்த ஆகஸ்டு மாதம் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.