தஞ்சையில், சுகாதார திருவிழா

தஞ்சையில், சுகாதார திருவிழா

Update: 2023-03-27 19:29 GMT

தஞ்சையில் நடந்த சுகாதார திருவிழாவை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

சுகாதார திருவிழா

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் சுகாதார திருவிழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

முகாமிற்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இம்முகாமில் தஞ்சை மருத்துவ கல்லூரியை சேர்ந்த சிறப்பு டாக்டர்களை கொண்டு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, கண் மருத்துவம், இலவச ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, ரத்த அழுத்தம் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

1,228 பேர் பயனடைந்தனர்

இதில் மொத்தம் 1,228 நபர்கள் பரிசோதனை மேற்கொண்டனர், இதில் 64 கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளும், 98 நபர்களுக்கு இ.சி.ஜி. பரிசோதனைகளும், 650 நபர்களுக்கு நீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட நபர்களில் புதிதாக 20 நபர்களுக்கு ரத்த அழுத்த நோயும், 12 நபர்களுக்கு சர்க்கரை நோயும் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராமசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமசிவாயம், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர் தமிழ்வாணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்