தட்டார்மடம் பகுதியில் தோட்டங்களில் தொடர் திருட்டு
தட்டார்மடம் பகுதியில் தோட்டங்களில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் பகுதியில் தோட்டங்களில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தோட்டங்கள்
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளிப்பத்து, படுக்கப்பத்து, சுந்தன்கோட்டை, பள்ளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆழ்துளை கிணறுகளில் மோட்டார்கள் அமைத்து அதன்மூலம் பெறும் தண்ணீரை கொண்டு முருங்கை, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த தோட்டங்களில் நாள் முழுவதும் உழைத்து இரவில் விவசாயிகள் வீடு திரும்புகின்றனர். ஆனால் மறுநாள் காலையில் தோட்டத்துக்கு செல்லும் விவசாயிகளுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. ஏனென்றால், தோட்டங்களில் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
தொடர் திருட்டு
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தட்டார்மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தோட்டங்களில் போடப்பட்டு இருக்கும் இரும்பு கதவுகள் காணாமல் போய் விடுகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பும் பல்வேறு தோட்டங்களில் இருந்த இரும்பு கதவுகள் திருட்டு போய் உள்ளன. சில நேரங்களில் மின்மோட்டார்கள், மின்சார ஒயர்கள், ஆடுகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிடுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏற்கனவே கடன் பெற்று விவசாயம் செய்து வரும் ஏழை விவசாயிகளின் பொருட்கள் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக திருடப்படுவதால், எப்போது எந்த பொருட்கள் திருட்டு போகுமோ? என்ற அச்சத்தில் உள்ளோம்.
மேலும் தோட்டங்களை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.