தஞ்சையில், விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம்
தஞ்சையில், விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம்
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி தஞ்சையில் விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம் சென்றனர்.
டிராக்டர் ஊர்வலம்
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் ஊர்வலத்துக்கு ஐக்கிய விவசாய முன்னணி சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் டிராக்டர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் வீரமோகன், . பழனிராஜன், திருநாவுக்கரசு, அருணாச்சலம், கோவிந்தராஜ், செந்தில், ராமசாமி, சுந்தரவிமலநாதன், பழனியப்பன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டெல்லி பாபு தொடங்கி வைத்தார்.
குறைந்தபட்ச விலை
தஞ்சை மணிமண்டபம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம், புதுக்கோட்டை சாலை, ஆர்.ஆர்.நகர், மேலவஸ்தாசாவடி வழியாக டேன்டேக்ஸ் ரவுண்டானாவை அடைந்தது. ஊர்வலத்தில் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 714 விவசாயிகளுக்கு நினைவிடம் அமைத்திட வேண்டும், போராட்டத்தின் போது இறந்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசு எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுத்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும், உத்திர பிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய மந்திரியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன், தி.க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.