தமிழகத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது: அமைச்சர் கீதாஜீவன்

தமிழகத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2022-12-18 18:45 GMT

கோவில்பட்டி:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெரு பாலச்சந்தர் நினைவுத்திடலில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு நகர அவை தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் சோம செந்தமிழ் செல்வன், ஓசூர் பாரி, நகர செயலாளர் கா.கருணாநிதி ஆகியோர் பேசினா். கூட்டத்தில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் கே. சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அண்ணாமலை மீது பாய்ச்சல்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயிலில் பயணம் செய்ததை வைத்து ஒரு கதை எழுதுகிறார். பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு இல்லையாம். ஆனால் எங்கள் தலைவர் ரெயிலில் வந்ததை தவறு என்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, அவர்களது குடும்பம் பற்றி பொய்யான, கற்பனையான தகவல்களை அவர் கூறக்கூடாது. அவர் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாந்து போகமாட்டார்கள். அவரது விமர்சனத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் நாங்களும் எதிர்த்து குரல் கொடுப்போம். இங்கு ஜாதி, மத பிரச்சினையை உருவாக்கி பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது பெரியார், அண்ணா, கருணாநிதி வளர்த்த மண்.

வெற்றிபெற முடியாது

இங்கு பா.ஜனதாவுக்கு வேலை இல்லை. எந்த தேர்தலாக இருந்தாலும் பா.ஜனதாவுக்கு நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் தான் கிடைத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவை விட கூடுதல் ஓட்டு பெற முயற்சி செய்கின்றனர். அந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது.தி.மு.க. கூட்டணி 40-க்கும் 40 தொகுதிகளில் வெற்றிபெறும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்