தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்

தென் இந்திய பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசிவருகிறது.

Update: 2024-05-27 23:19 GMT

கோப்புப்படம்

சென்னை,

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி, வெப்பத்தை தணித்தது.

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான 'ராமெல்' புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து, வடக்கு திசையில் நகர்ந்து, அன்று நள்ளிரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர் தீவுக்கும், வங்காள தேசத்தின் கேப்புப் பாராவுக்கும் இடையே கரையை கடந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று மதியம் 1.45 மணி நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையில் 2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதே நேரத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.

தற்போது, தென் இந்திய பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசிவருகிறது. இதன் காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழக கடலோரப் பகுதியான குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்று முதல் 31-ந் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும். இடையில் 65 கி.மீ. வேகமாகவும் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் 108 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும்

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில், "இந்த கோடை காலத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகமாக 104 டிகிரி வெயில் நேற்று பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில், வரும் நாட்களில் 107.6 டிகிரியையும் தாண்டி வெயிலின் அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இனி மழையை எதிர்பார்க்க முடியாது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்