தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத்தீ

காட்டுத்தீ

Update: 2023-03-11 20:30 GMT

தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

வனப்பகுதியில் கடும் வறட்சி

சத்தி புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி, பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இயற்கை எழில்கொஞ்சும் இந்த வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மரம், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன.

இதனால் உணவு, தண்ணீர் தேடி விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் இருக்கும் தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

காட்டுத்தீ

கடந்த வாரம் தாளவாடி வனப்பகுதியில் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. எந்த வாகனமும் அருகே செல்ல முடியாத இடம் என்பதால் வனத்துறையினர் நடந்து சென்று தீயை அணைத்தார்கள்.

எனினும் பல ஏக்கர் பரப்பளவில் மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் வனப்பகுதியில் நேற்று இரவு முதல் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இரவு நேரம் என்பதால் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்