தென்மாவட்டங்களில்ரவுடிகள், சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை: ஐ.ஜி. அஸ்ரா கார்க்
தென்மாவட்டங்களில் ரவுடிகள், சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மாவட்டங்களில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
பின்னர் தென்மண்டல ஐ.ஜி. கூறியதாவது:-
ரவுடிகள் மீது நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் 44 பேரும், தென்காசி மாவட்டத்தி் 33 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 பேரும் ஆக மொத்தம் 169 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை நெல்லை மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ரவுடிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 554 ரவுடிகள் ஆக மொத்தம் நெல்லை சரகத்தில் 2256 ரவுடிகள் மீது நிர்வாகதுறை நடுவர் அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற ரவுடி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
நடப்பாண்டில் இதுவரை நெல்லை மாவட்டத்தில் 29 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 13.704 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 43 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 28 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 42 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 15.232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 40 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை சரகத்தில் 123 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 270 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 59.016 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 147 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில் 29 கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போக்சோ
தூத்துக்குடி மாவட்டத்தில் 209 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 137 குற்றவழக்குகளில் புலன்விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரத்து 260 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கபட்டு வருகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை அதீத கவனத்துடன் கையாளப்பட்டு அந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.