டாக்டர் வீட்டில் 102 பவுன் நகை கொள்ளையில்மகனுடன் தம்பதி கைது

வாசுதேவநல்லூர் டாக்டர் வீட்டில் 102 பவுன் நகை கொள்ளை போன வழக்கில் மகனுடன் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-25 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் டாக்டர் வீட்டில் 102 பவுன் நகை கொள்ளை போன வழக்கில் மகனுடன் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

102 பவுன் நகை கொள்ளை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சமுத்திரவேலு. இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 38). ஓமியோபதி டாக்டர். இவர் அப்பகுதியில் கிளினிக் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

கடந்த 19-ந்தேதி இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 102½ பவுன் தங்க நகைகள், 263 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும்படியாக 4 பேர் அங்கு சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அதில், கொள்ளை சம்பவத்தில் அவரது உறவினர்களான தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற நிக்கல்சன் (50), அவருடைய மனைவி லலிதா (45), மகன் நவீன்குமார் (27) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களின் உறவினர்கள் வாசுதேவநல்லூர் தலையணையில் வசித்து வருவதால் அங்கு தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் டாக்டர் மணிவண்ணன் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். அதற்கு முன்பாக அதே பகுதியில் உள்ள மேலும் 3 வீடுகளில் கதவை உடைத்து பணத்தை திருடியதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சிறையில் அடைப்பு

கைதானவர்களிடம் இருந்து 165 கிராம் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் கைதான 3 பேரும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, லலிதா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், நிக்கல்சன், நவீன்குமார் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்