ரெட்டணை ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதடையும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
ரெட்டணை ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதடைந்து வருகிறது.
மயிலம்,
குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
மயிலம் அருகே ரெட்டணை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2018-19-ம் ஆண்டின் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அப்பகுதியில், ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. விரைவில் குடிநீர் சுத்திகரிப்பு எந்தி்ரம் பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் சுகாதாரமில்லாத குடிநீரை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ரூ.15 லட்சம் நஷ்டம்
குறிப்பாக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதடைந்து வருகிறது. மேலும் எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதி பாழடைந்து கிடப்பதால் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறி வருகிறது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் ரூ.15 லட்சம் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே பாழடைந்து கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.